தனது கவிதைகள், பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் என்றும் ஒரு அங்கமாக மாறியிருப்பவர் நா.முத்துக்குமார். காலத்தால் அழியாத காவிய பாடல்களை அளித்த கவிஞன்.
”தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற வரிகள் மூலம் தந்தைகளை ஆண் தேவதைகளாக மாற்றியவர். 16 ஆண்டுகள் தமிழ் திரையுலகை தனது வரிகள் மூலம் ஆட்சி செய்தவர் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மறைந்த உன்னத கவிஞர் நா.முத்துகுமார் பாடல்கள் மூலமும், கவிதைகள் மூலமும் மக்கள் மனதில் வாழ்கிறார்.
வயது வேறுபாடின்றி எல்லா வயது மக்களையும் தனது கவிதைகளால் கட்டிப்போட்டவர் நா.முத்துக்குமார். காதல், தனிமை,கொண்டாட்டம்,விரக்தி என அத்தனை உணர்வுகளையும் தனது வரிகள் மூலம் அனாயசமாக கடத்திய உன்னத கலைஞன் முத்துக்குமார்.
காஞ்சிபுரத்தில் பிறந்து, இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்து, பின்பு கவிதையே தனக்கான களம் என்பதை கண்டறிந்து காலத்தால் அழியாத கவிஞனாகி சென்றுள்ளார் முத்துக்குமார்.தூர் என்ற கவிதை மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, வீரநடை படத்தில் தனது முதல் பாடலை எழுதி தமிழ் திரையுலகில் 16 ஆண்டுகள் வீரநடை போட்டார்.
கற்பனைக்கு அப்பால் உள்ள விஷயங்களை உவமைகளாக எடுத்து கவிதை படைத்து கொண்டிருந்த சமயத்தில், நம் சம காலங்களில் நடக்கும் விஷயங்களை உவமையாக்கி அற்புதங்கள் படைத்தார் நா முத்துக்குமார். பூக்களை கொண்டு காலங்காலகமாக கவிதைகள் வெளியான நிலையில், கல்லறை பூக்களை கொண்டு நா முத்துக்குமார் எழுதிய வரிகள் கற்பனையின் உச்சம்.
”ஆனந்த யாழை மீட்டுக்கிறாள்
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாள் ”
என்ற வரிகளின் மூலம் மகளுக்காக ஆனந்த யாழை மீட்டியவர் நா. முத்துகுமார்.
”வளையாமல் நதிகள் இல்லை..
வழிக்காமல் வாழ்க்கையில்லை..
வரும் காலம் காயம் ஆற்றும்..”
காதலின் வலிகளையும் கொண்டாட்டங்களை ஒருசேர பிரிதிபலித்த கண்ணாடி நா.முத்துக்குமார். காதலின் பிரிவை மிக ஆழமாக நுட்பமாக அணுகி பலருக்கும் மருந்தாகி போனார். 1500 பாடல்களை எழுதி மறைந்த முத்துக்குமார் அவரது பாடல்கள் மூலமும் கவிதைகள் மூலமும் இன்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.








