ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட் அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் உணவு மற்றும் கூட்டுறவு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதங்களுக்குப் பிறகு பதிலுரை வழங்கிய உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபானி, கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைக்காலங்களில் சேதமடையாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் மற்றும் நிறத்தில் எந்த வகையிலும் குறைந்தது அல்ல என்பதை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகவும், கலர் சார்ட்டர் பொருத்தியது, நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் நிறுவுவது, விவசாயிகளிடமிருந்து பெற்ற நெல்லை விரைந்து அரவை ஆலைகளுக்கு அனுப்புவது, பாதுகாப்பாக நெல்லை சேமித்து வைப்பது, தரம் மற்றும் நிறம் குறைந்த அரிசியை தனியாக பிரித்து கடைகளுக்கு அனுப்பாமல் இருப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு நாளொன்றுக்கு 500 மெட்ரிக் டன் அரவை திறனுடன் ஆறு ஆலைகள் அரசு – தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும் என்று கூறிய அமைச்சர், அவற்றின் மூலம் பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்றும், கருப்பு அரிசியை நீக்கி தரமான அரிசி வழங்க தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.