புதுச்சேரி அரசு பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் விலையை மூன்று மடங்கு வரை உயர்த்தியுள்ள நிலையில் விஜயுடன் முதல்வர் ராங்கசாமிக்கும் சேர்த்து பேனர் வைத்துள்ள விஜய் ரசிகர்கள்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் வரும் 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கான ஆன்லைன் புக்கிங்கை ஒரு வாரம் முன்பே தியேட்டர்கள் தொடங்கின. முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெரும்பாலான தியேட்டர்களின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இந்நிலையில் ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்பே ஆன்லைன் புக்கிங்கில் பீஸ்ட் ஹவுஸ்ஃபுல் ஆகி வருகிறது எனவும், அண்ணாத்த, வலிமை, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் ரிலீஸுக்கு முந்தைய நாளில் கூட இந்தளவிற்கு டிக்கெட் புக்கிங் நிரம்பவில்லை எனவும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/tamiltalkies/status/1512256905221394434
தமிழகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் பீஸ்ட் விருந்துக்கு தயாராகிவரும் நிலையில் அப்படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாகும் எனவும், அதற்கு அடுத்தநாளே வெளியாகும் கே.ஜி.எஃப் 2-வுக்கு எத்தனை திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகளும், KGF 2-வுக்கு 200 முதல் 250 திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதைவைத்து பார்க்கும் போது கே.ஜி.எஃப்-ஐ விட பீஸ்ட் மூன்று மடங்கு அதிமான திரையரங்குகள் வெளியாகிறது எனக்கூறி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இன்னொரு புறம், புதுச்சேரியில் பீஸ்ட் திரைப்படத்திற்கான முதல் ஐந்து நாட்கள் டிக்கெட் விலையை மூன்று மடங்கு வரை உயர்த்த புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. படம் வெளியாகும் நாளான 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கான விலையேற்ற பட்டியலின் சுவரொட்டிகள் புதுச்சேரி தியேட்டர்களில் ஒட்டப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இதுபோல் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து,வேறு எந்த படங்களுக்கும் இல்லாமல் விஜய் படத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜயை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து பேசினார். உள்ளாட்சி தேர்தல், சினிமா உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக அப்போது தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அந்த சந்திப்பின் போது விஜய் கேட்டுக்கொண்டதால்தான் ‘பீஸ்ட்’ டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு வரை புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ளதா எனவும் சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், புதுச்சேரி அரசின் இந்த உத்தரவை வரவேற்கும் வகையில் நடிகர் விஜயுடன் முதல்வர் ரங்கசாமி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து பேனர்களும் கட் அவுட்-களும் விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









