மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவுக்கு பாமக ஆதரவு – ஜி.கே.மணி அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் ராமதாஸை அ.தி.மு.க. மாவட்ட…

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, பாமக தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் ராமதாஸை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் குழு இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசினார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைக் கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எழுதிய கடிதத்தை ராமதாஸிடம் ஒப்படைத்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுக குழுவினரும் கேட்டுக் கொண்டனர்.

அதிமுகவின் கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் நடத்திய கலந்தாய்வில், அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்பதை மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.