ஆந்திராவில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில், அவர் பறந்த ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசத்தின் சுதந்திரப் போராட்ட தலைவர் அல்லுரி சீதாராம ராஜூவின் 125ம் ஆண்டு பிறந்த தினத்தை ஒட்டி மாநில அரசு சார்பில் நடைபெற்ற அவரது சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரப்பிரதேசத்திற்கு வருகை தந்தார்.
கன்னாவரம் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து விழா நடைபெற்ற பீமாவரத்திற்கு ஹெலிகாப்டரில் பயணித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் அவரது ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்திற்கு அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
பிரதமரின் வருகையை ஒட்டி, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் எதுவும் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடையை மீறி மாநில காங்கிரஸ் செயலாளர் ராஜிவ் ரத்தன் கருப்பு பலூன்களை பறக்கவிட்டுள்ளார்.
இந்த கருப்பு பலூன்கள் பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டருக்கு அருகே பறந்ததால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கருப்பு பலூன்களை பறக்கவிட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
ராஜிவ் ரத்தன் தலைமறைவான நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜய் பால் இதனைத் தெரிவித்தார். மேலும், பிரதமரின் ஹெலிகாப்டர் புறப்பட்ட 5 நிமிடத்திற்குப் பிறகே பலூன்கள் பறக்கவிடப்பட்டதாகவும், இதனால் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை அடுத்து மீண்டும் அதுபோல் நிகழாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி முடிந்து மீண்டும் திரும்பியபோது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.











