மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணிவகுத்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் தற்போது அதுபோன்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரே.
அரசியலில் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறும். அதுவும் ஆட்சி மாறினால் காட்சி மாற்றங்கள் அதிரடியாகவே இருக்கும். மகாராஷ்டிராவிலும் தற்போது அது போன்ற சூழல்தான் காணப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உத்தவ் தாக்ரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவனேசா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியபோது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பூகம்பமே வெடித்தது. தனது பக்கம் 50 எம்.எல்.ஏக்கள் வரை இருப்பதாகவும் அவர்களில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் 39 பேர் எனவும் ஷிண்டே கூறியபோது, பலருக்கு நம்புவதற்கு சிரமமாகத்தான் இருந்தது.
குஜராத், அசாம் என அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பயணித்து வந்த ஏக்நாத் ஷிண்டே நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருந்தபடியே தமது ஆதரவு எம்.எல்.ஏக்களின் வீடியோக்களை வெளியிட்டு தான் சொல்லும் எண்ணிக்கை உண்மைதான் என நம்பவைத்தார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவார்கள் என்கிற நம்பிக்கை குறைந்தபோது, தகுதி நீக்கம் என்கிற அஸ்திரத்தை எடுத்தது சிவசேனா. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி அமைச்சர்களின் பதவியையும் பறித்தார் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே. தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள் என ஏக்நாத் ஷிண்டேவுக்கு பின் அணி வகுத்த சிவசேனா எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து எச்சரிக்கப்பட்டனர். 16 பேருக்கு தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீசையும் துணை சபாநாயகர் அனுப்பினார்.
ஆனால் நிலைமை தற்போது தலைகீழா மாறியுள்ளது. ஆட்சி மாறியதும், காட்சிகள் மாறின. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்களின் பிரிவு சட்டப்பேரவையில் உண்மையான சிவசேனாவாக அங்கீரிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றதும், சிவசேனா சட்டமன்ற கட்சித் தலைவராக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரித்தார். மேலும் சிவசேனாவின் தலைமைக் கொறாடாவாக ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ பாரத் கோகவாலே தேர்ந்தெடுக்கப்பட்டதையும் சபாநாயகர் அங்கீகரித்தார்.
இதையடுத்து சட்டப்பேரவையை பொறுத்தவரை உண்மையான சிவசேனா தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் என்பது போல் ஆகிவிட்டது. உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தற்போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போல் ஆகிவிட்டனர். இந்நிலையில் நேற்று சிவசேனாவின் தலைமைக் கொறாடாவாக அங்கீகரிக்கப்பட்ட பாரத் கோகவாலே, தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என உத்தரவு பிறபித்தார். இதையடுத்து அந்த உத்தரவை மீறினால் தகுதி நீக்க நடவடிக்கை பாயும் என்கிற அச்சுறுத்தல் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா பிரிவு எம்.எல்.ஏக்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த அணியிலிருந்து சந்தோஷ் பாங்கர் என்ற எம்.எல்.ஏ இன்று ஏக்நாத் ஷிண்டே அணியில் அடைக்கலமானார்.
ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டேவிற்கு 39 சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில் அவரது ஆதரவு சிவசேனா எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதரவாக 164 வாக்குகளும், அவருக்கு எதிராக 99 வாக்குகளும் விழுந்தன. எதிர்க்கட்சிகளின் மொத்த பலம் நேற்று சபாநாயகர் தேர்தலில் 107ஆக இருந்த நிலையில் இன்று 99ஆக குறைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அமோக வெற்றி பெற்றது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணி அரசுக்கு ற்சாகத்தை அளித்துள்ளது. அதே நேரம் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கொடுப்பில் கொறாடா உத்தரவை மீறி ஏக்நாத் ஷிண்டேவிற்கு எதிராக வாக்களித்த உத்தவ் தாக்ரே பிரிவு சிவசேனா எம்.எல்.ஏக்கள், தகுதி நீக்க நடவடிக்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கருதப்படுகிறது. உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரேவும் அதில் அடங்குவார்.
முன்பு தனது தந்தை பால்தாக்ரே நம்பிக்கை வாக்கு கோரவிருந்தபோது கொறடா உத்தரவை மீறினால் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள் என ஏக்நாத் ஷிண்டே அணியின் எம்.எல்.ஏக்களை எச்சரித்த ஆதித்யா தாக்ரே, தற்போது கொறடா உத்தரவை மீறி அதே போன்ற சிக்கலை எதிர்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல் காட்சிகள் மாறுவதாக மகாராஷ்டிர அரசியலை உற்றுநோக்குபவர்கள் கருதுகின்றனர். எனினும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதன் தீர்ப்பை பொறுத்து மகாராஷ்டிராவில் காட்சிகள் மீண்டும் மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எஸ்.இலட்சுமணன்




