பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றிருந்தது. இதனையடுத்து வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கூடுதல் பதக்கங்களை வெல்ல வீரர்கள், வீராங்கனைகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா, பேட்மிண்டனில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து உள்ளிட்ட சில வீரர்ர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாகவும் பங்கேற்றனர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒலிம்பிக்கிற்காக பாரீஸ் செல்லும் நம் வீரர்களுடன் கலந்துரையாடினேன். நமது விளையாட்டு வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் வாழ்க்கைப் பயணங்களும், வெற்றிகளும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன” என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








