ஈரானின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள இப்ராஹிம் ரைசிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi), ரிசர்வ் வங்கி யின் முன்னாள் கவர்னர் அப்துல் நாசர் ஹெம்மாட்டி, முன்னாள் ராணுவ தளபதி முகசன் ரஜாய், அமீர் உசேன் காஜிஜடேஹசேமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் இப்ராகிம் ரைசி, வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இப்ராஹிம் ரைசிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ஈரானின் புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ள, இப்ராகிம் ரைசிக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கும் ஈரானுக்குமான உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.







