50 சதவீத பயணிகளுடன் நாளை காலை 6 மணி முதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பொது ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மேலும் ஒருவாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இது மாநகரப் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“மாநகரப் போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்கும்படி போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாளை காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு விதித்துள்ள வழிகாட்டும் நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடித்து பொதுமக்கள் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு மாநகரப் போகுவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.







