மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி எடுப்பதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனையும் படியுங்கள்: வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால், விவசாயிகள் அனைவரும் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும்.
மேலும் நிலக்கரி எடுக்கும் திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்திக்கும். மக்கள் அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்படும். நம் மண்ணைக் காக்க நாம் போராட்ட களத்தில் சங்கமிப்போம். அமைதி வழி போராட்டமாக மத்திய அரசை கண்டித்து, கைவிட வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் அவசரம் கருதி இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் பி ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








