24 மணி நேரத்திற்கு பிறகு மாணவனின் உடல் மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவரின் உடல் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.   திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சையது முத்துஷா மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு…

திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவரின் உடல் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

 

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சையது முத்துஷா மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர் முகேஷ் குமார் (வயது 17) நேற்று சிந்தாமணி அருகே உள்ள காந்தி படுதுறையில் பள்ளி புத்தகப் பையை வைத்துவிட்டு குளிக்க ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது.

 

அப்போது ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் மாணவர் முகேஷ்குமார் ஆற்றுக்குள் இழுத்து செல்லப்பட்டார், அதை பார்த்து அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர், மாணவரின் பையில் இருந்து பெயர் விலாசம் உள்ளிட்ட விவரங்களை கைப்பற்றி பின்னர் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவரின் உடலை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் மாணவரின் உடலை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்புத்துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு முகேஷ்குமாரை தேடும் பணி நடைபெற்றது.

 

இந்நிலையில், ஏறத்தாழ 24 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர, நீச்சல் வீரர்கள் உதவியுடன் மாணவர் முகேஷ்குமார் உடலை மீட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.