20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது தாயாரை சமூக ஊடகம் மூலம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் யாஸ்மின் ஷேக். இவரது தாயார் துபாய் நாட்டுக்கு சமையல் பணிக்காக சென்றுள்ளார். அதன்பின் அவர் நாடு திரும்பவேயில்லை. இதுபற்றி யாஸ்மின் கூறும்போது, எனது தாயார் ஹமீதா பானு வேலைக்காக கத்தார் நாட்டுக்கு சென்றார். அவர் 2 முதல் 4 ஆண்டுகள் வரை கத்தார் நாட்டில் தங்கி வேலை செய்வது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், கடந்த முறை ஏஜெண்டு உதவியுடன் வேலைக்கு சென்ற அவர் திரும்பி வரவேயில்லை. கடந்த 20 ஆண்டுகளாக அவரை தேடி வருகிறோம். பல இடங்களில் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். ஆனால் எங்களது அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. எங்களிடம் சான்றுகள் இல்லாத சூழலில் புகார் கூட அளிக்க முடியவில்லை என வருத்தமுடன் கூறியுள்ளார்.
அந்த ஏஜெண்டிடம் எனது தாயாரை பற்றி கேட்கும்போதெல்லாம், எங்களிடம் பேசவோ அல்லது சந்திக்கவோ அவர் விரும்பவில்லை என கூறுகிறார். ஆனால், அவர் நலமுடன் உள்ளார் என கூறுவார். அதன்பின் அந்த ஏஜெண்டையும் காணவில்லை. அவரை எங்களால் அணுக முடியாத சூழலில் தாயாரை கண்டுபிடிப்பது சிக்கலான ஒன்றாக இருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு ஒரு சமூக ஊடக கணக்கின் உதவியுடனேயே எனது தாயாரை பற்றிய விவரம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் எங்களுக்கு தெரிய வந்தது என அவர் தெரிவித்தார். அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு உதவ வேண்டும் என யாஸ்மின் கோரிக்கை விடுத்துள்ளார்.