அணுகுண்டால் பாதிக்கப்பட்டு அவள் அழுத புகைப்படத்தை இன்று யார் பார்த்தாலும் கண்கலங்கிவிடுவார்கள். ஆனால் தான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரையும் வைரங்களாக மாற்றி இன்று போரால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு எதிராக போராடி வரும் ‘நப்ளம்’ சிறுமி’ என்றழைக்கப்படும் ‘பான் தை கிம் பக்’ இன்று தன்னுடைய 58-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1972-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதி வியட்நாம் நாட்டிலுள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது திடீரென குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு குழந்தைகள் வெளியே ஒடி வந்தார்கள். அவர்களுடைய கிராமம் முழுவதும் தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது. அதிலிருந்து தப்ப முயன்ற 9 வயது சிறுமி பான் தை கிம் பக்கின் உடல் முழுதும் தீ பற்றிக்கொண்டது. அவளைப்போல் மற்ற குழந்தைகளும் குண்டு வெடிப்பின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உதவிகள் கிடைக்கும் வழிநோக்கி ஓடத் தொடங்கினார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பான் தை கிம் பக் தன் உடல் முழுவதும் தீப்பற்றி கொண்டதால் உயிரைக் காப்பாற்ற அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிவிட்டு ஓட ஆரம்பித்தாள் அவள். அவள் பின்புற உடல் முழுவதும் வெடி குண்டு ரசாயனத்தால் பாதிக்கப்பட்டது, இடது கை முழுமையாக பாதிக்கப்பட்டது தன் மீது எரிந்துகொண்டிருந்த தீயுடன் வெறும் கால்களில், இருகைகளையும் நீட்டி ஆடைகளின்றி 9 வயதான பான் தை கிம் பக் ஓடிவந்த காட்சி இன்றும் உலகை உலுக்கிய புகைப்படங்களில் முதன்மையானதாக உள்ளது.
நரக வேதனையில் ஓடி வந்துகொண்டிருந்த பான் தை கிம் பக்யை அசோசியட் பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிக் உட் (Nick Ut) என்ற புகைப்பட கலைஞர் படம் எடுத்தார். அந்த புகைப்படம் போரின் தாக்கத்தால் குழந்தைகள் பாதிக்கப்படும் கொடூரத்தை உலகிற்கு எடுத்துரைத்தது. இன்றும் போரின் கொடூரத்தை உணர்த்திவருகிறது.

புகைப்பட கலைஞர் நிக் உட் உடல் முழுதும் தீ காயமடைந்த அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து அவர் உயிரைக் காப்பாற்றினார். இப்படத்திற்கு நிக் உட் உலகின் தலைசிறந்த விருதுகளின் ஒன்றான புலிட்சர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்க ராணுவ தாக்குதலில் சுக்குநூறான வியாட்நாம் இன்னும் ஆசியக் கண்டத்தில் பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. தன் நாட்டின் வளர்ச்சியைப் போல் பான் தை கிம் பக்கும் தன்னுடைய மனவளர்ச்சியால் இன்றைக்கு உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக உள்ளார்.
ஒரு போர் எவ்வளவு கொடூரமானது என்பதைப் புரிய வைக்க பான் தை கிம் பக் புகைப்படம் ஒன்றே போதுமானது. 9 வயதில் அணுக்குண்டு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அவர் தன்னுடைய வாழ்நாள் முழுமைக்கும் அதனுடைய வடுக்களை தன்னுடைய உடல் முழுவதும் சுமந்துவருகிறார். இதுவரை 17 அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் பான் தை கிம் பாக்.

தற்போது கனடா நாட்டில் வசித்துவரும் பான் தை கிம் பக் தன்னைப்போல் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிசெய்து வருகிறார். அதற்காக ‘kimfoundation.com’ என்ற தன்னார்வ அமைப்பை நடத்திவருகிறார். தன்னுடைய சுயசரிதையை ‘FIRE ROAD’ என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ளார்.

“நப்ளம் குண்டைவிட அன்பும் மன்னிப்பே உலகில் சக்தி வாய்ந்தவை என்பதைப் புரிந்துகொண்டால் உலகில் இனியொரு போர் நிகழாது” எனும் பான் தை கிம் பக் அணுக்குண்டைவிடச் சக்திவாய்ந்தது அன்பு மட்டுமே என்பதற்கு வாழும் சாட்சியாக உள்ளார்.