”பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” -டிஜிபி விளக்கம்.!

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல்…

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  இது தொடர்பாக பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவர காவல்துறையினர் கைது செய்தனர்.  தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதால்,  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதில் ராஜ்பவன் மெயின்கேட் அருகே காவலர்கள் பாதுகாப்பு அலுவலில் இருந்த போது, கருக்கா வினோத் என்பவர் நுழைவு வாயில் எண் 1-ன் எதிர்புறம் நின்றவாறு 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசியதாக கூறப்பட்டுள்ளது.  முதல் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் நுழைவு வாயிலின் முன் விழுந்த நிலையில், உடனடியாக வினோத்தை பிடிப்பதற்காக காவலர்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் மற்றொரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை தீப்பற்ற வைத்து மீண்டும் காவலர்களை நோக்கி வினோத் வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், அங்கிருந்த சில காவலர்கள் சிலர் வினோத்தை மடக்கி பிடிக்க முற்பட்டபோது,  ‘என்னை பிடிக்க வந்தீங்களா.. உங்க மேலேயும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிடுவேன்’ என்று அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிண்டி காவல் நிலைய தலைமைக் காவலர் மோகன் அளித்துள்ள புகாரின் பேரில் 5 பிரிவுகளின்கீழ் வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  பொது சொத்தை சேதபடுத்தியதற்காகவும்,  அதை தடுக்க வந்த காவலர்களை பணி செய்ய விடாமல் பெட்ரோல் பாட்டிலை வீசி மிரட்டியதற்காகவும் வினோத மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல் தகவல் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.,..

“ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை.  தன்னிலையாக பதிவு புகார் செய்யப்பட்டுள்ளது.  இதனால் தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது.  பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்த போலீசாரின் விசாரணையில் அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே இது தொடர்பான விரிவான விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளது” என ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

25.10.2023 அன்று நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

அதேபோல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும்,  இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது. ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர்.

அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன.

மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும்,  உடனடியாகக் குற்றவாளி கைதுசெய்யப்பட்டார். மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.