கடந்த 22ஆம் தேதி இரவு பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும்
கல்வீச்சு என அடுத்தடுத்து ஐந்து சம்பவங்களில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி ஊத்துகாடு ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது ரஃபீக், செர்ரிஸ் காலனி
பகுதியைச் சேர்ந்த மாலிக் என்கிற சாதிக் பாஷா, சூலேஷ்வரன் பட்டி மகாத்மா
காந்தி வீதியைச் சேர்ந்த ரமீஸ் ராஜா என்ற மூவரை கைது செய்து காவல் துறையினர்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு வீச்சு, கல் வீச்சு உள்ளிட்ட அடுத்தடுத்த சம்பவங்களைத் தொடர்ந்து ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த நிலையில் 5 சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் விரைவில் கைது
செய்யப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் முகமது ரபிக் என்பவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பொள்ளாச்சி நகர தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பெட்ரொல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக நேற்று 2 பேர்
கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








