அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து வழக்கு!

காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.   நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.ராமு போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை…

காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.ராமு போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. 

இறுதியில் 85,140 வாக்குகளைப் பெற்ற துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராமு 84,394 வாக்குகளைப் பெற்றார். தற்போது நீர்வளத் துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இரண்டாவது இடம் வகிக்கிறார். அவை முன்னவராகவும் இருக்கிறார். 

இந்த நிலையில் காட்பாடி தொகுதியில்  துரைமுருகன் வெற்றிபெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்  அதிமுக வேட்பாளர் வி.ராமு. தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும், மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் என தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.