டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு, முதன்முறையாக மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார். நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்படும் முதலமைச்சர், நண்பகல் டெல்லி சென்றடைகிறார். அங்கு, திமுக எம்பிக்கள், அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாலை 5 மணிக்கு லோக் கல்யாண்மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் நிலவும் கொரோனா சூழல், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தில் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமருடனான சந்திப்புக்கு பின் டெல்லி ITO பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை ஸ்டாலின் பார்வையிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மறுநாள் காலை 8 மணிக்கு ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக மு.க. ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.