தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் வரும் 30-ந் தேதி முதல் விசாரணை!

அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு…

அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. நிதி மசோதா என்பதால் மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே அவை நிறைவேற்றப்பட்டது. இது சட்டவிரோதம் என்றும், இந்த சட்டத்தில் உள்ள சரத்துகள் பலவும் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொது நல அமைப்புகள் சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஆண்டு தேர்தல் பத்திரம் தொடர்பாக வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட அறிவிப்பாணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அனுப் சவுத்ரி என்பவர், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முறையிட்டார்.

தற்போது தேர்தல் எதுவும் நடைபெறப் போவதில்லை என்பதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கு விசாரணையை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

மேலும் அக்டோபர் 30-ம் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.