2 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு அனுமதி: 3 தொகுதிகளில் தடை நீட்டிப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

5 தொகுதிகள் காலியான பின்னணி!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளும் காலியாகின.

தேர்தல் வழக்குகளால் ஏற்பட்ட சிக்கல்!

இதற்கிடையே, இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜும், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட வி.பி. மதியழகனும், விராலிமலையில் சி.விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட செல்லபாண்டியனும் வழக்கு தொடர்ந்தனர்.அதேபோல், பெருந்துறையில் ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலமும், அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையாவின் வெற்றியை எதிர்த்து வாக்காளரான காந்திமதி நாதனும் தேர்தல் வழக்கு தொடர்ந்தனர்.

5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தத் தடை!

இந்த நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினால், பின்னர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பால் ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்குரைஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜூலை 10-ஆம் தேதி 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தத் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் சார்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

அம்பாசமுத்திரம், பெருந்துறையில் தேர்தல் நடத்த அனுமதி!

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது. அதேநேரத்தில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த 3 தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் முடிவடைந்த பின்னரே இடைத்தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் முக்கியத் தெளிவு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தடை நீக்கப்பட்டுள்ளதால் அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ மறைவால் அந்தத் தொகுதியும் காலியாகியுள்ள நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.