நவம்பர் 30-ல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தன. இந்நிலையில், நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ள சிறப்புக் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், திமுக சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதி மறுவரையறையில் திமுகவின் நிலைப்பாடு!
இதற்கிடையே, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
- நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
- 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





