திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு : தவெக மீது மு.க. ஸ்டாலின் சாடல்…!

திராவிடர் கழகத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :

NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசை விடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது!

தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்?

திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?

கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, வீரமணி அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.