பாடம் நடத்த ஆளின்றி மாணவர்கள் அவதிப்படுவதால், பிடிவாதம் காட்டாமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி மூன்றாவது மாதம் தொடங்கிவிட்ட நிலையில், 20 சதவீத ஆசிரியர்கள் மட்டும் தான் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை காட்டும் அலட்சியம் பெரும் வேதனையும், ஏமாற்றமும் அளிப்பதாகவும் கூறியுள்ளார். காலாண்டுத் தேர்வுகள் தொடங்கப்பட உள்ள நிலையில், பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கான தடையை உயர்நீதிமன்றம் நீக்குவதோ, மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் வருவதோ உடனடியாக நடப்பதற்கு சாத்தியம் இல்லை. உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் நடப்பு கல்வியாண்டு முழுவதும் பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டிய அவர், அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு பள்ளிக்கல்வித் துறையே காரணம் ஆகி விடக் கூடாது. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.








