பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் ஜாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்று இருந்தது. இது பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தக் கேள்வி இடம்பெற்றதற்கு பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது.
இதுகுறித்த விளக்கத்தை பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், சர்ச்சைக்குரிய கேள்வியால் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இனிவரும் காலங்களில் இது போன்ற சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம்பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெற்ற வினாத்தாள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் கோபி தெரிவித்துள்ளார்.
M.A., வரலாறு பாட 2-வது செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் தமிழ்நாட்டில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. மஹர், நாடார், ஈழவர், அரிஜன் ஆகிய சமூகப் பிரிவுகளைக் குறிப்பிட்டு இவற்றுள் தமிழ்நாட்டில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது கடும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை என்கிற தலைப்பில் கேள்வி இடம் பெற்றுள்ளதும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. சாதி ஒழிப்பில் ஈடுபட்ட பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் சாதிகளைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளது தற்போது கடும் விவதாப் பொருளாக மாறியது.








