மாமனிதன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி கலந்து கொண்டனர்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் மாமனிதன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில்
மாமனிதன் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. தற்போது சினிமாவின் வியாபாரம் பல அடுக்குகளாக உள்ளது. ஆஹா ஓடிடி மூலம் இப்படம் 180 நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை பார்க்காதவர்கள் ஆஹா ஓடிடியில் பாருங்கள். இக்கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள் என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில்
ஓடிடியில் இப்படத்தை பார்ப்பவர்கள் மனதை ராதாகிருஷ்ணன் தொடுவான். இது ஒரு உயிர்ப்பான திரைப்படம். தமிழ் சினிமாவில் தற்போது சீனு ராமசாமி போன்று இயல்பாக படம் எடுப்பவர்கள் கிடையாது. லாஜிக் எல்லாம் பார்த்தால் படம் பார்க்க முடியாது. மாமனிதன் ஒரு எளிமையான படம். சில படங்கள் வந்தபோது கொண்டாட தவறிவிடுவோம். காலம் கடந்து அதுபற்றி பேசுவோம். இது அவ்வாறான படம் என்றார்.
– தினேஷ் உதய்








