வர்த்தகத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடிக்கு நஷ்டத்தை எல்ஐசி நிறுவன பங்குகள் அளித்துள்ளது முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
முதல் நாள் வர்த்தகத்தில் எல்ஐசி மிக பெரிய நஷ்டத்தை சந்திதுள்ளது. எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், பங்குச்சந்தை யூக வணிகம் தான் என்பதை எல்.ஐ.சி. நிறுவனத்தின் முதல் நாள் பங்கு வர்த்தகம் நிரூபித்திருக்கிறது. இது குறித்து பார்க்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, முதன் முறையாக பொதுப் பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. தொடக்கத்தில் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், 3 புள்ளி 5 சதவீத பங்குகள் விற்பனைக்கு வந்தன.
கடந்த 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற பங்கு வெளியீட்டில், ரூ.21,000 கோடி திரட்டப்பட்டது. 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட, ஒரு பங்கின் விலை 902-ல் இருந்து 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. பங்கு விற்பனையில், நிறுவன முதலீட்டாளர்களுக்கு 50 சதவீதமும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35 சதவீதமும், எல்.ஐ.சி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி மே 17-ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் எல்ஐசி நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டன. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முதல் வர்த்தக நாளில், எல்ஐசி நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. முதல் நாள் வர்த்தகத்தில் எல்.ஐ.சியின் பங்கு 873 ரூபாய்க்கு வர்த்தமாகி, முதலீட்டாளர்களை கலங்க வைத்தது.
இதனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்தனர். முதல் வர்த்தக நாளில், முதலீட்டாளர்களுக்கு 42 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு நஷ்டத்தை எல்ஐசி நிறுவன பங்குகள் அளித்தன.
ஆயுள் காப்பீடு துறையில் கோலோட்சி வரும் எல்ஐசி நிறுவனம், பங்கு சந்தையில் காலடி வைத்தால், கோல் இந்தியா, ONGC வரிசையில் மிகப் பெரிய அளவில் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறும் என்று கணித்த நிலையில், அதனை பொய்யாக்கி இருப்பதாக கூறுகின்றனர் காப்பீட்டுத் துறை நிபுணர்கள்.
முதல் நாள் வர்த்தகத்தில் சரிவை சந்திதாலும், இனி வரும் காலங்களில் சந்தை நிலவரம் மற்றும் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாட்டிற்கு ஏற்ப எல்ஐசி நிறுவன பங்குகளின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என காப்பீட்டுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.