முதலமைச்சரை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன்

பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்கப் பார்த்து கொள்ளுங்கள் என முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு தீர்வளிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமாக அரசியல் சாசன பிரிவு…

பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்கப் பார்த்து கொள்ளுங்கள் என முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு தீர்வளிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமாக அரசியல் சாசன பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அவரை பேரறிவாளன் விமான நிலையத்திலேயே சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இச்சந்திப்பில், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

சந்திப்பைத் தொடர்ந்து பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். பேரறிவாளன் பேசியபோது, “முதலமைச்சருடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது. குடும்பத்தினர் பற்றியும் கேட்டறிந்தார். மாநில அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறது என்றார். அதற்காக நாங்கள் நன்றி தெரிவித்தோம்” என்று கூறினார்.

இது நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனக் கூறிய அவர், அடுத்தகட்ட செயல்பாடுகள் என்ன என்ற கேள்விக்கு, இப்போதுதான் சுதந்திரமாக வெளிக் காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ளேன். சுவாசித்துக்கொள்கிறேன். பிறகு அதுகுறித்து முடிவெடுக்கிறேன் என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய அற்புதம்மாள், பேரறிவாளன் சிறையில் 31 ஆண்டுகள் இருந்தார். மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்க பார்த்து கொள்ளுங்கள் என நான் முதலமைச்சரிடம் கேட்டேன். முதலமைச்சரும் பதிலுக்கு, அதையே எண்ணுவதாக என்னிடம் கூறினார். பேரறிவாளனுக்கு தொடர்ந்து மருத்துவ உதவிகள் வழங்கும்படி கேட்டுக்கொண்டேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.