சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம், சிபிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் சிபிஐ காலனி, பாபு நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் நீண்ட நேரமாக மின் இணைப்பு வழங்காததால் மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் தொலைபேசியிலும், செல்போனிலும் தொடர்பு கொண்டுபோது அழைப்பை ஏற்காததால் ஆத்திரமடைந்து மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக சிலர் புகார் அளிக்க சென்றுள்ளனா்.
ஆனால் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் யாரும் இல்லை, அவர்களுக்கு பதிலாக அலுவலகத்தில் இருந்த தற்காலிக ஊழியர்கள் போன் ரிசிவரை போனில் இருந்து எடுத்து கீழே வைத்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அலுவலகத்துக்கு வந்த தற்காலிக ஊழியர்களை பொதுமக்கள் கேள்விகளால் வறுத்தெடுத்தனர். அப்பொழுது ஊழியர்கள் மது அருந்திவிட்டு இருந்ததால் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
—-ரூபி.காமராஜ்







