ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முதல் பாகத்தை தொடர்ந்து பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ திரைபபடம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு காலை 5 மணி அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த படத்திற்கு முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் 10 மணிக்கு தான் திரையிடப்பட்டது.
வடபழனி விஜயா மாலில் உள்ள திரையரங்கில் வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பார்க்க நடிகை த்ரிஷா வந்தார். ரசிகர்களோடு ரசிகராக இருக்கையில் அமர்ந்து படத்தினை பார்த்து ரசித்தார். இதேபோல் நடிகர் விக்ரமும், தனது மகன் தனது மகன் துருவ்வுடன் சேர்ந்து திரையரங்கிற்கு வந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை கண்டு மகிழ்ந்தார்.
இவரைப் போலவே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தினை பார்ப்பதற்காக காசி திரையரங்கத்திற்கு வருகை தந்த நடிகர் கார்த்தியை, நான்கு குதிரைகள் புடைசூழ அவரது ரசிகர்கள் மலர் தூவி அழைத்து வந்தனர். அங்கு நடிகர் கார்த்தி படத்தினை ரசிகர்களோடு ரசிகராக இருக்கையில் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தார்.
சென்னையின் முன்னணி திரையரங்குகளில் டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்று தீர்ந்துவிட்டன. இதில் விதிவிலக்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா திரையரங்கில் 4 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த 4 காட்சிகளுக்குமான டிக்கெட்டுகள் முழுமையாக விற்கவில்லை என கூறப்படுகிறது. இது போலவே, காசினோ, உதயம் திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்பனை மந்தமாகவே காணப்படுகிறது. மேலும் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் சரியாக விற்கவில்லை என கூறப்படுகிறது.
அதேபோல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய திரையரங்குகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கத்தை விட கூட்டம் மிகவும் குறைவு. திருச்சியில் பெரும்பாலான திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்கு முழு டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை. பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றிற்கு கிடைத்த வரவேற்பு, பாகம் இரண்டிற்கு கிடைக்கவிலையோ என்ற பேச்சு பரவலாக உள்ளது.
அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் படம் இன்று அதிகாலை 1:30 மணிக்கும், கேரளா மற்றும் கர்நாடகாவில் படத்திற்கு காலை 5 மற்றும் காலை 6 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா











