வீரப்பனின் சொந்த ஊரில் 3 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தன வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராமம் தமிழக – கர்நாடக எல்லையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 3,900 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஒருசிலர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.
தேவையற்ற பயம் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை ஆகியவைதான் கோபிநத்தம் கிராமத்தினர் தடுப்பூசி போடுவதில் சிக்கலாக இருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர். 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு கோபிநத்தம் கிராம ஊராட்சியில் உள்ள 7 மலை கிராமங்களில் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது 16 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பகுதியில் 69 சதவிகிதம் பேர் 45 வயதிற்கு அதிகமானோராக இருப்பதால் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதாக தகுதி உள்ளது. ஆனாலும் வெறும் 3 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரண் குமார் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பக்க விளைவுகள் பற்றிய வதந்திகள் தொடர்பாகவும் விளக்கி அவர்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வற்புறுத்தி வருகிறோம் என்றார்.







