முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

கன்னித் தமிழை கணினிக்கு கொண்டு வந்த அனந்தகிருஷ்ணன்!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், சிறந்த கல்வியாளர்களில் ஒருவருமான பேராசிரியர் மு.அனந்தகிருஷ்ணன் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்.

யார் இந்த அனந்த கிருஷ்ணன்?

கற்றலிலும், கற்பித்தலிலும் கரைகண்டவர் அவர். வாணியம்பாடியில் உள்ள பெரியபேட்டையில் 1928 ஆம் ஆண்டு , முனிரத்தினம்- ரங்கநாயகி தம்பதிக்கு மகனாக பிறந்த அனந்தகிருஷ்ணன் தொடக்கல்வியை பெரியபேட்டை நகராட்சி ஆரம்பப் பள்ளியிலும், உயர் நிலைப்பள்ளிப் படிப்பை இஸ்லாமியா பள்ளியிலும் படித்தார். சென்னையில் கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டட பொறியியல் பயின்ற பின், அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொறியியல் மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றவர்.

தாயகம் திரும்பிய அவர், கான்பூர் ஐ.ஐ.டியில் சிவில் இன்ஜினீயரிங் துறையில் பேராசிரியராக, துறைத்தலைவராக, பொறுப்பு இயக்குநராக பல பொறுப்புகளில் பணியாற்றினார். கான்பூரில் ஐ.ஐ.டி இயக்குநர் பொறுப்பிலிருந்த அனந்த கிருஷ்ணன், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் ஐநா சபை பணிக்கு சென்றார். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர், ஐ.நா வின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் துணை இயக்குநர், இம்மையத்துக்கான ஐ.நா. ஆலோசனைக் குழு செயலர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார்.

1990 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்த அவர், கணினி யிலும், இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதில் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர்.

2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு, அனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரைகளின் அடிப்படையில்தான், அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. தமிழ்நாடு அரசின் ,பாடத்திட்ட திருத்தக் குழுவின் (2017) தலைவராக இருந்தார், முப்பது ஆண்டுக்காலத்திற்கு மேலாக , தமிழ்நாடு உயர்கல்வி துறையில் பல புதுமைகளை புகுத்த அரசோடு பணியாற்றினார்.

தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளில் பங்கேற்று இணையத்திலும் ஏடிஎம், மொபைல் என பலவகை மின்னணு சாதனங்களில் தமிழையும், தமிழ் எழுத்துருக்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு சென்றவர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, பொறியியல் மாணவர்களுக்கு தேர்வுகளை செமஸ்டர் அடிப்படையில் நடத்த காரணமாக இருந்தவர் அனந்த கிருஷ்ணன்.

நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர், 1996 ஆம் ஆண்டு பிரேசில் அதிபரின் ஆர்டர் ஆஃப் சயின்டிஃபிக் மெரிட் விருதையும் கல்விப்பணிக்காக 2002 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். இவருக்கு மனைவி ஜெயலட்சுமி மற்றும் நான்கு மகன்கள் உள்ளனர். இவர் மகன் ஸ்ரீதர் அனந்தகிருஷ்ணன், சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுப்புற சூழல் ஆராய்ச்சியாளர். அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறை குறித்தும், புவி வெப்பமயமாதலை எப்படி குறைப்பது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தி கொண்டுள்ள ஸ்ரீதர் அனந்த கிருஷ்ணனின் பெயரையே அண்டார்டிகாவில் ஒரு பகுதிக்கு சூட்டியுள்ளனர்.

இறுதிமூச்சு வரை கல்வித்துறைக்காக பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் அனந்த கிருஷ்ணனின் பணிகளை, இன்றைய தலைமுறை முன்னெடுத்து செல்வதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

தங்கபாண்டியன்.ரா , நியூஸ் 7 தமிழ்

Advertisement:

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளிக்கும் இந்தியாவுக்கு நன்றி- WHO!

Jayapriya

2021 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் – மு.க. ஸ்டாலின்

Jeba

“மு.க.அழகிரியின் அரசியல் குறித்த முடிவுகளில் தலையிட எனக்கு அருகதை இல்லை” – கனிமொழி

Jayapriya