அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் இப்போது குதிரை பேரத்தால் விலை போய் விட்டார். கட்சி மாறிய அவர் அந்தக்கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இது ஜனநாயக படுகொலை. நீங்கள் அளித்த வாக்கை அவர் விற்றுவிட்டார். தவெக வேட்பாளருக்கு இடைத்தேர்தலில் தக்க தண்டனையை வழங்க வேண்டும்.
விஜய் முகத்தைக் காட்டினாலே ஓட்டு விழும்னு தவெகவினர் சொல்கிறார்கள்.பிறகு எதற்கு மதுராந்தகம் தொகுதியில் தெருத் தெருவாகப் போக வேண்டும்? மக்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள். இனி ஏமாற மாட்டார்கள். தவெக ரீல்ஸை வைத்துதான் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர். அதுவும் மைனாரிட்டி ஆட்சி. தவெக ஆட்சியைக் காப்பாற்ற்டிக்கொள்லவே அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.
விவசாயிகளை மதிக்கின்ற கட்சி அதிமுக. விவசாயிகள் துன்பப்படும்போது உதவும் கட்சி அதிமுக. விவசாயிகள் கேட்காமலே உதவிய அரசு அதிமுக அரசு. முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது. டிராக்டர் ஓட்டிய முதல்வர் விஜய், விவசாயிகளுக்கு ஏதாவது செய்துள்ளாரா? அவருடைய கனவு கானல்நீராகத்தான் இருக்கும். டீக்கடையில் டீ குடிக்கச் சென்ற முதல்வர் விஜய், டீ குடிக்காமல் அப்படியே சென்றுவிட்டார்.
நீதி கேட்டு உங்களை சந்திக்கிறேன்; நீங்க கொடுக்குற நீதி, இந்திய துணைக்கண்டமே வியக்குற அளவுக்கு இருக்கணும். கரண்ட் பில் எப்படி கணக்குப் போடுறாங்கன்னே தெரியல; 1,000 ரூபாய் வந்த இடத்துல 3,000 ரூபாய் வருது; கரண்ட்டை தொட்டாதான் ஷாக் அடிக்கும்னு சொல்லுவாங்க; ஆனா, இப்ப கரண்ட் பில் பத்தி கேட்டாலே ஷாக் அடிக்குது! இதுக்கு ஒரு தீர்வு காண இந்த அரசுக்கு வக்கில்லை! இவரு நேர்மையா இருக்காராம்! வெளிநாட்டுல இருந்து வாங்குன காருக்கு வரியே கட்டல. அப்படி வரி ஏய்ப்பு செய்தவர்தான் இன்னைக்கு முதலமைச்சரா இருக்காரு. இவரு நேர்மையானவரா? விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” இவ்வாறு அவர் பேசினார்.




