“இப்படி ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்கள்தான் அழணும்!” – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்.6-ஆம் தேதி இடைத்தேதல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் இறுதிகட்டப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் குண்டடம் மேற்கு ஒன்றியம் நொச்சிபாளையம் பகுதியில் வேன் மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

“5 மாசத்துக்கு முன்னாடி இதே மாதிரிதான் வந்து உங்ககிட்ட ஓட்டு கேட்டேன். ஜெயிக்க வச்சுருவோம், போயிட்டு வாங்கன்னு சொல்லி என்னை அனுப்பி வச்சீங்க; ஆனா, கடைசியில் எனக்கு பெரிய அல்வா கொடுத்துட்டீங்க; இந்த முறை தவெக வேட்பாளருக்கு ஓட்டு போட்டா, அவங்க நூத்துல ஒருத்தரா இருப்பாங்க; திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவுக்கு ஓட்டு போட்டா, அவங்க உங்களில் ஒருத்தரா இருப்பாங்க. நம்ம கூட்டணியில வெற்றி பெற்ற சிலர் பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். அவர்கள் துரோகிகள், அவர்களை மறக்கமாட்டோம்.

சட்டப்பேரவைக்கு போனா, நாங்க காதுல பஞ்சு வச்சுட்டுதான் போகணும்; அந்த அளவுக்கு கத்துவாரு முதலவர். ஆனால், தாராபுரத்துல கத்தாம நடிக்க ஆரம்பிச்சுட்டாரு! தாராபுரம் தவெக வேட்பாளர் நல்லாத்தான் பேசிட்டு இருந்தாங்க. பின்னாடி இருந்து ஒரு அமைச்சர், நீ பேசுனது போதும். பெர்ஃபார்மன்ஸ் ஆரம்பின்னு சொன்னதும் அந்தம்மா அழ ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களுக்கு ஓட்டு போட்ட நாங்கதான் அழணும், இப்படி ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்கள்தான் அழணும்.

ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருத்தர், எங்களுக்கு முதலமைச்சர் முகமே தெரியவில்லை. அவர் பேசுறதையாவது பார்க்கணும்னு சொல்கிறார். ஆமா, அப்படியே பேசி கிழிச்சுட்டாரு! சில நேரம் அவையில பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பாரு. சில நேரம் அவர் அவையில இருக்காரா, இல்லையானே எங்களுக்கு தெரியாது.

சட்டப்பேரவையில் நாங்கள் படும் பாடு எங்களுக்கு தான் தெரியும். என்ன கேள்வி கேட்டாலும் பாட்டு மட்டுமே பாடுகிறார்கள். சட்டசபையில் முதல்-அமைச்சர் முன் நடனம், சண்டைக்காட்சி மட்டும் தான் அரங்கேறவில்லை. சத்தியபாமா வெற்றிபெற்றால் மீண்டும் கட்சி மாறுவார். காதல் தோல்வி பற்றி பேரவையில் எம்.எல்.ஏ. பேசுகிறார், முதலமைச்சர் விஜய் சிரிக்கிறார்.

சட்டசபையில் நான் கேட்ட 18 கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை. சட்டப்பேரவையில் யாரும் ஓடக்கூடாது என சொல்லிவிட்டு முதலமைச்சர் விஜய் ஓடினார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி பேசியதைக் கேட்கக்கூட பேரவையில் முதலமைச்சர் இல்லை. தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.