நாடு முழுவதும் உண்மை நசுக்கப்பட்டு வருவதாகவும், அது நடைபெறாமல் தடுப்பது தனது பொறுப்பு என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் முடிந்த மறுநாளான இன்று அக் .3 சனிக்கிழமை, நாடு முழுவதும் நடைபெற்று வரும் பிரச்சினை சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ‘சத்தியாகிரகா’ என்ற டிஜிட்டல் தளத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.
இந்தத் தளத்தின் மூலம் அரசுக்கு எதிராக மக்கள் தங்களது போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். “உண்மை எங்கு நசுக்கப்பட்டாலும், அங்கு மக்களுக்கு உதவ வேண்டும்” என்பதே இந்த முயற்சியின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறியதாவது:“நாடு முழுவதும் மக்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால், பல நேரங்களில் அவர்கள் தனியாகவே போராட வேண்டிய நிலை உள்ளது. Gen Z தலைமுறையினர், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு போராட்டத்துக்கும் தனித்தனி கதை உள்ளது. ஆனால், தனியாக எழுப்பப்படும் குரலை அடக்குவது எளிது. அதனால், மக்கள் தங்களது போராட்டங்களை ஒன்றிணைத்து வலுவான குரலாக எழுப்புவதற்கு ‘சத்தியாகிரகா’ தளம் உதவும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.




