தமிழகத்தில் மக்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்து ஈரோடு இடைத்தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இபிஎஸ்-சிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் கம்பன் கழக விழாவில் பங்கேற்க வந்த ஜிகே வாசன் இன்று எடப்பாடி பழனிசாமியை இன்று சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பேசினார். இருவரும் சுமார் 25 நிமிடங்களுக்கும்மேலாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி கே வாசன், மக்கள் பிரச்சினையை தீர்க்காத அரசு திமுக. அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றிய அரசாகவே திமுக இருந்து வருகிறது. அதனால் மக்கள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்.தமிழகத்திலும் திமுகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர். பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்த்து திமுகவிற்கு பாடம் கற்று தர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அந்த நிலை, மக்கள் நினைக்கும் மாற்றமாக நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக ஏற்படும். தேர்தல் ஆணையம் எல்லா தேர்தலுக்கும் ஒரு கோட்பாடு கொடுத்துள்ளது. காலக்கெடு கொடுத்துள்ளது. அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை அறிவித்து எதிர்மறை வாக்குகளை முழுமையாக பெற்று வெற்றி பெரும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் 2019 -ஆம் ஆண்டு முதல் எல்லா தேர்தல்களிலும் கூட்டணியில் உள்ளது. அது தொடர்கிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் குறையவில்லை, இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியது ஆட்சியர்களின் கடமை. அது சரிவர செய்யவில்லை என மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அதற்கான பாடத்தை இந்த ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள் என்று ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா