கோவை மாநகர பகுதிகளில் தலைக்கவசம் இன்றி பெட்ரோல் போட வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை காவல் ஆணையர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர பகுதிகளில் விபத்துக்களைத் தவிர்க்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாகக் கோவை மாநகர பகுதிகளில் உள்ள சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகன ஓட்டிகளின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர். மேலும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். அத்தோடு, ஆங்காங்கே வாகனத் தணிக்கை செய்து வந்தனர்.
அண்மைச் செய்தி: ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு’
இந்நிலையில், கோவை மாநகர பகுதிகளில் தலைக்கவசம் இன்றி பெட்ரோல் போட வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை காவல் ஆணையர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகக் கடந்த சனிக்கிழமை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களைச் சந்தித்த மாநகர போக்குவரத்து துணை ஆணையர், பெட்ரோல் பங்குகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கி வைக்குமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, பெட்ரோல் பங்குகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை சேகரித்து, அதில் தலைக்கவசமின்றி வாகனங்களை ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், சிசிடிவி கேமராவில் பதிவான வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அவர்களது வீட்டு முகவரிக்கே அபராத நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.








