நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

நீதிமன்றத்தில் காவல் துறையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது நீதிமன்ற பணியாளர்கள் நேரம், தேதி, முத்திரை, கையெழுத்து உடன் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் இதனை மாவட்ட முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க உயர்நீதிமன்ற…

நீதிமன்றத்தில் காவல் துறையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது நீதிமன்ற பணியாளர்கள் நேரம், தேதி, முத்திரை, கையெழுத்து உடன் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் இதனை மாவட்ட முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிடையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2018-ஆம் ஆண்டு என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிடையில் மனுத்தாக்கல் செய்தேன். அப்போது அரசு தரப்பில் என் மீது பதியப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரணை செய்ய உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பின் என் மீது பதியப்பட்ட வழக்கின் இறுதி அறிக்கை நகலைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் கேட்கும்போது நீதிமன்றத்தில் தற்போது வரை இறுதி அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர். எனவே, நீதிமன்றத்தில் தவறுதலாக அறிக்கை அளித்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவும் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தென் மண்டல காவல்துறைத் தலைவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது, பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது நீதிமன்றப் பணியாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை எனவும், அதைப் பெற்றுக் கொண்டாலும் அதற்குரிய எந்தவிதமான ஒப்பு கைச்சீட்டு வழங்கப்படுவதில்லை எனவும், காவல்துறையினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது போதிய அளவு நீதிமன்றப் பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என அவர் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டும்; நீதிமன்றத்தில் கடிதத்தைத் தாக்கல் செய்த ஓபிஎஸ்’

அப்போது நீதிபதி, தென்மண்டல காவல்துறை தலைவரை நீதிமன்றத்திற்கு அழைத்தது உண்மையான களநிலவரம்என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அனைத்து நீதிமன்றங்களிலும் இறுதி அறிக்கை தாக்கல் செய்தால் நீதிமன்றப் பணியாளர்கள் அதனைப் பெற்றுக்கொண்டு ஒப்புகைச் சீட்டு நேரம், தேதி, முத்திரை கையெழுத்துடன் சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடம் வழங்க வேண்டும். அதே நேரத்தில் இறுதி அறிக்கையில் தவறுகள் இருப்பின் அதனையும் குறிப்பிட்டு ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். இதை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்டத்திலுள்ள முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பான நிலை அறிக்கையைத் தென் மண்டல காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.