முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

உடைந்த கண்ணாடியா ஓபிஎஸ் – இபிஎஸ் உறவு? மனங்கள் ஏன் இணையவில்லை?


மரிய ரீகன் சாமிக்கண்ணு

கட்டுரையாளர்

ஒற்றைத்தலைமையை நோக்கி நகரும் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் இறுதி யுத்தத்தில் இருக்கிறது. இரட்டை தலைமையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த அதிமுக, கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை தேவை என மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி தீயை பற்ற வைத்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றைத் தலைமை அதிமுகவிற்கு தேவை என்று அன்றைய தினமே செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதனால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இபிஎஸ்ஓபிஎஸ் இருவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியே கடந்த 4 நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இணையாத மனங்கள் கடந்து வந்த பாதை:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்க சென்ற போது, இபிஎஸ் ஆதரவாளர்களாக கருதப்படும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகமும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் வெளியேறினர். இது தொடர்பாக, எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆலோசனை நிறைவடைந்ததால் அவர்கள் வெளியேறியதாக அதிமுக வட்டாரங்கள் கூறினாலும், மனங்கள் கசந்து இருப்பதும், அது இன்னும் இணையவில்லை என்ற செய்தியும் பரவத் தொடங்கியது.

அதிமுக தலைமை அலுவலகத்தில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், கடந்த 16 ஆம் தேதி இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அதில், அடுக்கடுக்கான பல கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக, ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு திடீரென வெளிவந்தது கனவா நினைவா என்றே தெரியவில்லை. தலைமைக் கழக நிர்வாகிகள் பேச வேண்டிய கருத்தை மாவட்ட செயலாளர்கள் பேசியதாக விமர்சித்தார். தலைமைக்கழக நிர்வாகிகள் பேசியதை வெளியே கூறக்கூடாது, ஏன் ஜெயக்குமார் அதனை வெளியே பேசினார் என கடுமையாக குற்றம்சாட்டினார். பொதுச்செயலாளர் பதவிக்கு யாருமே வரக்கூடாது என்று தீர்மானமே போடப்பட்டுள்ளது. அதை மீறுவது அம்மாவுக்கு செய்யும் துரோகம் எனக் கூறினார். தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கருத்தை வெளியே கூறியது கண்டிக்கத் தக்கது, அதனை இபிஎஸ் உடன் சேர்ந்து கண்டிக்க வேண்டும்.

ஒற்றைத் தலைமை, பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து இபிஎஸ் உடன் பேச தயாராக உள்ளேன் என்று ஓபிஎஸ் கூறினார். தலைமைக்கழக நிர்வாகிகள் பேசியதை வெளியே கூறியவர் மீது இதுவரை இபிஎஸ் – ஓபிஎஸ் சார்பாக கண்டித்து அறிக்கை இதுவரை வெளியே வரவில்லை. அதேபோல, பேச தயாராக இருக்கிறேன் என இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் வெளியிட்ட வெளிப்படையான அழைப்பிற்கான பதிலும் இதுவரை வெளியாகவே இல்லை.
இங்கு தான், தர்ம யுத்தத்திற்கு பிறகு கடந்த 2017ல் இபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து சில மாதங்களே ஆன நிலையில், அதிமுக மாநிலங்களவை முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கூறிய கருத்தை கவனிக்க வேண்டியுள்ளது. அணிகள் இணைந்தன, ஆனால், மனங்கள் இணையவில்லை என்பது தான் அந்த கருத்து. 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மனங்கள் இன்னும் இணையவில்லை என்பது தற்போது, ஓபிஎஸ் – இபிஎஸ் தங்களின் ஆதரவாளர்களோடு தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் சூழலில் அது பூதாகரமாக வெடித்துள்ளது.

நல்லாதானே போய்ட்டு இருந்தது:

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் அதிமுகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமானது. எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டாலும் ஒருமித்த கருத்துக்களுடன் கூடிய ஒரு அறிக்கையைக் கூட அதிமுக தலைமை வெளியிடவில்லை. பெரும்பாலும், அதிமுகவின் அரசியல் நிலைப்பாடு கொண்ட கருத்துக்களை இரட்டை தலைமை வெளியிடுவதை விட, அதிமுகவின் கொள்கைக்கு எதிராக பேசியவர்களை நீக்குவதற்காக மட்டுமே இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். ஆளும் திமுக அரசு மீதான விமர்சனத்திற்கோ, தமிழ்நாடு அரசியல் சார்ந்த கருத்துக்களுக்கோ இபிஎஸ் – ஓபிஎஸ் பெரும்பாலும் தனித்தனியாகவே அறிக்கை வெளியிட்டனர். இதில், இருந்தே, அதிமுக தலைமை நன்றாக செல்லவில்லை என்பது வெளிப்பட்டது. அதே போல், அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் தான் என சசிகலா அறிக்கை வெளியிட்டார். இந்த பின்னணியில், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து அதிமுக உயர் மட்டக்குழு தான் தீர்மானிக்கும் எனக் கூறியதும் தனி கவனம் பெற்றது. அதிமுகவில் சசிகலா இணைப்பதற்கு இபிஎஸ் தரப்பில் முடிந்து போன விஷயம் என்று கடந்து போனார். ஆனால், தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று ஓபிஎஸ் கூறியது சர்ச்சைக்கு வித்திட்டது.

ஒற்றைத் தலைமையை நோக்கிய பயணம்:

அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு யார் செல்லப்போகிறார்கள் என்பதில் இந்த இரு அதிகார மையங்களும் கடுமையாக மோதிக்கொண்டன. இபிஎஸ் ஆதரவாளர்களான சி.வி. சண்முகம், ஜெயக்குமார், செம்மலை, கோகுல இந்திரா ஆகியோர் பெயர்களே அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் நபர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்தது. ஏறக்குறைய, சி.வி. சண்முகம், ஜெயக்குமார் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இறுதியில், இபிஎஸ் சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிறுத்தப்பட்டார். அப்போது தான் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஓபிஎஸ் களத்தில் இறங்கினார். பட்டியலில் இல்லாத தர்மரின் பெயரை ஓபிஎஸ் முன்னிறுத்தினார். அங்கு தான் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கசப்பு அதிகம் ஆனதாக கூறப்படுகிறது. ஒற்றைத் தலைமை தேவை என்கிற பேச்சும் அங்கு தான் எழுந்ததாக கூறப்படுகிறது.

அதிமுக தலைமையைக் கைப்பற்ற இறுதி யுத்தம்:

இந்த பின்னணியில் தான், ஒற்றைத் தலைமையையும், அதிமுகவிற்கு மீண்டும் பொதுச்செயலாளர் தேவை என்பதையும், மாதவரம் மூர்த்தி பேசு பொருளாக்கினார். ஜெயக்குமார் அதை வேகமெடுக்க வைத்தார். இது, இபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொள்ளும் அளவிற்கு வெடித்தது. ஒபிஎஸ் – ஓபிஎஸ் தங்களின் ஆதரவாளர்களுடன் கடந்த ஒரு வாரமாக தீவிர ஆலோசனையில் இறங்கும் அளவிற்கு சென்றது.

சமரசம் ஆகவில்லை என்றால்?:

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான அறிவிப்பாணையில் இபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்தே கையெழுத்திட்டனர். தற்போது, பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் எனக் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறுகிறார். ஆனால், திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். இதனால், நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும் என்ற கட்டாயத்தில் ஓபிஎஸ் உள்ளார். அதே சமயம், பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக, இபிஎஸ் தரப்பு தனித்தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரம் பொதுக்குழுவிற்கு இருப்பதால், கட்சி தலைமையை ஒற்றைத் தலைமையாக மாற்ற இந்த தனித்தீர்மானம் உதவும் என்று இபிஎஸ் தரப்பு நம்புகிறது. அப்படி, தனித்தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் அது தங்களுக்கு பாதகமாக மாறும் என்றும் ஓபிஎஸ் தரப்பு எச்சரிக்கையுடன் இருக்கிறது.

நீதிமன்றத்தை நாடும் ஓபிஎஸ்?:

அதிமுக தலைமை குறித்து பொதுவெளியில் நடக்கும் விவாதங்கள் அதிமுகவை பலவீனப்படுத்தும் சூழலில் உள்ளது. இந்த பின்னணியில் தான், ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கையெழுத்து வெளியிட்ட கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதில், ஓபிஎஸ் எழுப்பிய ஐந்து கேள்விகள் அதிமுக்கியமாக பார்க்க வேண்டியுள்ளது. அதன்படி, முன்னறிப்பு இல்லாதம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களை அழைக்காதது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஊடகங்களில் பேசியது கட்சி கட்டுப்பாட்டை மீறியுள்ளது என்ற விமர்சனம். பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டி கருப்பொருள் குறித்து இதுவரை தலைமைக்கழக நிர்வாகிகள் யாருக்கும் கருத்துகள் வெளிப்படையாக அனுப்பி வைக்கப்படாதது. இறுதியாக, மிக முக்கியமாக, தற்போதையை சூழலில், அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என்ற கருத்தையும் ஓபிஎஸ் கடிதம் மூலமாக இபிஎஸ்க்கு அனுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தான் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மற்றும் மூத்த நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், சிறப்பு அழைப்பாளர்களை அழைக்காதது ஓபிஎஸ்-க்கு தெரிந்து தான் நடந்தது என்றும், இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடக்கும் இந்த கருத்து பரிமாற்றம் இயல்பானது, இடையில் இருக்கும் சிலர் தான் பிரச்னையை பெரிதாக்குவதாக கூறியுள்ளார். ஜூன் 23 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். ஒற்றைத் தலைமைத் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுமே என்பது தங்களுக்குத் தெரியாது.

பொதுக்குழு முடிவை இபிஎஸ் – ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வார்கள். பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பார் என்றும் கே.பி. முனுசாமி உறுதியாக கூறினார்.
இபிஎஸ்க்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம் தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நடக்குமா நடக்காதா என்பது நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேகதாது விவகாரம்: “தமிழக அரசிற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்”

Halley Karthik

‘விக்ரஹா’ ரோந்து கப்பல் : அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Gayathri Venkatesan

புதிய வழியில் மக்களுக்கு உதவ திட்டம்: கங்குலியின் பரபரப்பு அறிவிப்பு

Mohan Dass