தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, ஆளுநர் மாளிகை யை நோக்கி நாளை பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் குடியரசுக்கும், பாதுகாப்பிற்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை பாஜக அரசு, மோடி அரசு மூடி மறைக்கிறது. இதனை கண்டு பொதுமக்கள் கிளர்ந்து எழ வேண்டும். இல்லை என்றால் நாடு அடிமைப்படுத்தப்பட்டு விடும்.
இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம், நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு மூடி மறைக்கிறது.
இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை நோக்கி நாளை பேரணி செல்ல இருக்கிறோம்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.







