போர் சூழல் தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

போர் சூழல் தொடர்பாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதும், ஈரான் தன் பங்கிற்கு இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதால் மேற்காசிய நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், போர் சூழல் தொடர்பாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில், “அதிபர் அநுர குமார திசாநாயக்க அவர்களுடன், மேற்கு ஆசியாவில் மேலெழுந்துள்ள சூழ்நிலை தொடர்பாகவும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி துறை பாதுகாப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் இடையூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இந்தியா – இலங்கை இடையில் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காக கொண்ட முக்கிய முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும் நாம் மீளாய்வு செய்தோம்.

மிகவும் நெருங்கிய மற்றும் நம்பகமான பங்காளராக, பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்தினோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.