கொலம்பியாவின் புட்டுமாயோ மாகாணத்தில் உள்ள பியூர்ட்டோ லெகுய்சாமோ விமான நிலையத்திலிருந்து 128 பேருடன் புறப்பட்ட ‘ஹெர்குலிஸ் சி-130’ ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பயணித்த 115 ராணுவ வீரர்கள், 11 பணியாளர்கள் மற்றும் 2 காவல்துறையினரில் 66 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் பொதுமக்கள், தீயை அணைக்க முயன்றதோடு, காயமடைந்த வீரர்களைத் தங்களின் இருசக்கர வாகனங்களிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, ராணுவத்தினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாயமான 4 வீரர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, ராணுவ விமானங்களை நவீனப்படுத்தும் தனது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என குற்றம்சாட்டினார்.







