தருமபுரம் ஆதினம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருபூஜை விழா, பட்டினப் பிரவேச விழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் நாள் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம்.
மனிதனை மனிதன் தூக்கிச் செல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகளின் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடைவிதித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பட்டினப் பிரவேச நிகழ்வு நேற்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, பல்லக்கினை நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர். சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.
ஆதீன மடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் குரு மகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, கருப்பு முருகானந்தம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.







