பாட்னா டூ டெல்லி – மாநிலத் தலைவர்களின் தேசிய கூட்டணி: 1977 வரலாறு 2024ல் திரும்புமா…?

பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம், புதிய வரலாற்றைப் படைக்கும் என்று அதில் பங்கேற்ற தலைவர்கள் சொல்கிறார்கள். இந்த கூட்டத்தின், கூட்டணியின் முக்கியத்துவம் என்ன? விரிவாக பார்க்கலாம். பிரதமராக இந்திரா காந்தி இருந்த…

பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம், புதிய வரலாற்றைப் படைக்கும் என்று அதில் பங்கேற்ற தலைவர்கள் சொல்கிறார்கள். இந்த கூட்டத்தின், கூட்டணியின் முக்கியத்துவம் என்ன? விரிவாக பார்க்கலாம்.

பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது 1975ம் ஆண்டு நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். அப்போது தமிழ்நாட்டில் திமுக தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, எந்த பதவியும் வேண்டாம் என்று இருந்த ஜெ.பி என்கிற ஜெயப்பிரகாஷ் நாராயண் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, பீகாரில் இருந்து மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்தார்.

அப்போது, பாதிக்கப்பட்ட பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டங்களை முன்னெடுத்தன. இதை ஜெ.பி மூவ்மெண்ட் என்பார்கள். அதில், பாஜகவின் தாய்க்கட்சியான ஜனசங்கமும் பங்கேற்றது. தற்போது 2023ல் ஜெ.பியின் மாணவர்களான லல்லுபிரசாத், நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பில் மீண்டும் பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடின. தற்போது ஆளும் பாஜகவிற்கு எதிராக அணி திரண்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக திட்டமும் எதிர்க்கட்சிகளின் வியூகமும் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் பொதுத்தேர்தலிலும் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளது பாஜக; ஆனால், மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்படுகின்றன. மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. எனவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுத்தே ஆக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு சமூகநீதிக் கூட்டமைப்பு முன்னெடுத்தார். தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். பின்னர் அவர்களுடன் உரையாடினார். இந்த ஆண்டு, ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் இருவரும் பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தனர்.

பாஜகவிற்கு எதிராக அணி திரள வேண்டியது குறித்தும், எதிர்க்கட்சிகளின் வாக்கு சிதறாமல் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். ஏனென்றால், கடந்த 2019ம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் 38% வாக்குகளைப் பெற்ற பாஜக ஆட்சியமைத்தது. ஆனால், 62% வாக்குகள் எதிராக இருந்தும், சிதறிக்கிடந்ததால், பாஜக ஆட்சியமைப்பதைத் தடுக்க முடியவில்லை. அது போன்ற நிலை 2024ம் ஆண்டு தேர்தலிலும் நடந்து விடக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

பீகாரில் கூடிய தலைவர்கள் இதைத் தொடர்ந்து, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் முதல் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி, சிவசேனா உத்தவ் தாக்ரே பிரிவு, தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போட்டியிட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஜூலை மாதம் சிம்லாவில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் இறுதி செய்யப்படும்’’ என்றார்.

ஒருங்கிணைப்பின் அவசியம்:

மேலும், இந்த கூட்டத்தில், அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, கூட்டணியின் பொது செயல் திட்டம். பொது வேட்பாளர், மாநிலக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். குறிப்பாக, ’’எங்களிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கொள்கைக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்துவோம் ’’ என்று ராகுல் காந்தியும், ’’பீகாரில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம், மக்கள் இயக்கமாகியுள்ளது’’ என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் கருத்து: 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ’’இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை காக்க வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இதில், அனைவரும் தெளிவாக இருக்கிறோம்’’ என்றார். மேலும், மாநிலக் கட்சிகள் செல்வாக்காக உள்ள மாநிலங்களில் அந்த கட்சிகளின் தலைமையில் கூட்டணி, பொது வேட்பாளர் உள்ளிட்ட 7 ஆலோசனைகளையும் சொல்லியுள்ளதாக தெரிவித்தார்.

தவிர்த்த தலைவர்கள்: 

ஆனா… தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக், உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த கட்சிகள் எல்லாம் பாஜ்கவுடன் இணக்கமாக அல்லது சரியான நிலைப்பாடு இல்லாம இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. பீகாரில் பிரதமர் கனவோடு உள்ள தலைவர்கள் நிறைந்த கட்சிகள் ஒன்று கூடியதாக விமர்சனமும் செய்கின்றனர்.

பாஜக விமர்சனம்:

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்து கூறுகையில், ‘’எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல். பதவிக்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.’’ என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ‘’அனைவரும் புகைப்படக் காட்சிக்காக (போட்டோ ஷூட்) ஒன்றுகூடி இருக்கிறார்கள். ஒருங்கிணைய மாட்டார்கள். ஒருங்கிணைந்தாலும், வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வென்று, நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார் ’’ என்றார்.

ஆம் ஆத்மி அதிருப்தி?

பாட்னா கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சி, டெல்லி நிர்வாக சேவைகள் குறித்து கொண்டுவரப்பட்ட அவசர சட்ட விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆம் ஆத்மி எழுப்பியுள்ள கேள்வியால், அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தொடக்கத்திலேயே கூட்டணியில் குழப்பமா? என்கிற கேள்வியும் ஒரு பக்கம் எழுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பாஜக எதிர்ப்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கை கோர்க்குமா…?

மாநிலத் தலைவர்களின் தேசிய கூட்டணி தேர்தல் களத்தில் வெல்லுமா…..?
பீகாரில் கூடிய எதிர்க்கட்சிகளால், 1977 போல் 2024-கிளும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?
கருக்கொண்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்கொள்ளுமா….? காத்திருப்போம்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.