கோவையில் 64 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நூலகம் மூடப்பட உள்ள நிலையில் சலுகை விலையில் புத்தகங்களை வாங்க பொதுமக்கள் நூலகத்திற்கு படையெடுத்துள்ளனர். பொன்விழாவை கடந்து செயல்பட்டு வந்த நூலகம் திடீரென மூடப்படுவதற்கு வாசகர்கள் தான் காரணமா? நூலகம் மூடப்படுவது எதை உணர்த்துகிறது? விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….
கோவை தடாகம் சாலையில் 1960 ஆம் ஆண்டு தியாகு புக் சென்டர் என்ற பெயரில் பெருமாள்சாமி என்பவர் நூலகத்தை தொடங்கினார். அதன் பிறகு பெருமாள் சாமியின் மகன் தியாகராஜன் 1980 முதல் 43 வருடங்களாக இந்த நூலகத்தை நடத்தி வந்தார்.. கிட்டத்தட்ட 1000 சதுர அடியில் 80 ஆயிரம் புத்தகங்களுடன் செயல்பட்டு வந்த தியாகு நூலகம் கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வாசகர்களுக்காக பல்வேறு புத்தகங்களை தியாகராஜன் வாங்கி வைத்தார்.
இந்த நிலையில் இந்த நூலகத்தை மூடுவதற்கு தியாகராஜன் முடிவு செய்துள்ளது வாசகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் நிறைந்த தியாகு புக் சென்டர் வரும் 30 ஆம் தேதி முதல் மூடப்படும் என அதன் உரிமையாளர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
அதன்படி நூலகத்தில் உள்ள நூல்களை 30% முதல் 50 சதவீதம் வரை சலுகை விலையில் விற்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் நூலகத்துக்கே வராத பலரும் தியாகு புக் சென்டரில் புத்தகங்களை அள்ளுகின்றனர். குறிப்பாக ஒரு தனியார் பள்ளி தனக்கு தேவையான 15,000 புத்தகங்களை இந்த நூலகத்தில் இருந்து வாங்கி கொண்டுள்ளது.
அரிதான நூல்கள், ஆய்வு கட்டுரைகள், வரலாறு, புனைவு கதைகள், ஆங்கில நாவல்கள் என சுமார் 80 ஆயிரம் நூல்களுடன் இயங்கிவந்த இந்த நூலகத்துக்கு, தினமும் 20 முதல் 25 வாசகர்களின் வருகை இருந்து வந்த நிலையில், கரோனாவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கையானது 2 அல்லது 3 பேர் என சுருங்கிப்போனது.
நூலகத்தை மூடும் நிலைக்கான காரணங்கள் குறித்து தியாகராஜன் கூறும்போது, “ 5 ஆயிரம் வாசகர்கள் தொடர்ந்து உறுப்பினர்களாகத்தான் இருக்கின்றனர், புதிய புத்தகங்கள் வந்துள்ளது என அவர்களிடம் தெரிவித்தால், ‘சார், அப்புறம் வரேன் சார்’. ‘இப்போ படிக்க நேரம் இல்லை’ என்பதே பெரும்பாலானோரின் பதிலாக உள்ளது என தெரிவித்தார்.
இயந்திர உலகத்தில் அனைத்தும் கைபேசியில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி வாசிப்பு பழக்கம் குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது எனவும் மற்றும் எதையோ நோக்கி அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.இரண்டு தலைமுறைகளாக குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை பெற்றோர் ஊட்டவே இல்லை என தெரிவிக்கும் தியாகராஜன், மாணவர்கள் மதிப்பெண் பெற்றால் போதும் என்பதே, ஆசிரியர்களின் மனநிலையாகவும் உள்ளது. கூடவே, தொழில்நுட்ப வளர்ச்சியும் வாசிப்பு பழக்கத்தை கடுமையாக பாதித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
2010 ஆண்டுக்குப் பின்னர் வாசகர்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் கொரோனாவுக்கு பிறகு முற்றிலுமாக வாசகர்கள் நின்று விட்டார்கள் என கூறும் தியாகராஜன், தற்போதுள்ள இடத்தின் வாடகையும் இரு மடங்காக உயர்ந்ததால், அதை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக சொந்த சேமிப்பில் இருந்துதான் வாடகை செலுத்தி வருகிறேன். நூலகத்தை தொடர்ந்து நடத்த வாடகை இல்லாத இடம் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தேன். ஆட்கள் வந்து பார்த்துவிட்டு, ‘நல்ல கலெக்ஷன் வைத்துள்ளீர்கள்’ என்று சான்றளித்துவிட்டு போனார்களே தவிர, மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை” என தியாகராஜன் தெரிவித்தார்.
இந்த நிமிடம் 43 வருடங்களாக தன்னிடமிருந்த குழந்தையை இழப்பது போன்று உணர்வதாக கண்ணீர் வடிக்கின்றனர் தியாகராஜனும் அவரது மனைவியும். சமூக ஊடகங்களின் வளர்ச்சி வாசிப்பு பழக்கம் குறைய காரணமாக இருக்கிறது என எழுத்தாளர்கள் பலரும் வேதனை தெரிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டு தலைமுறைகளாக செயல்பட்டு வந்த நூலகம் மூடப்படுவது நூல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.








