ஓடும் பேருந்தில் பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அரசுப் பேருந்தை நேராக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் எந்தவித இடையூறும் செய்யாமல் இச்செயலுக்கு ஒத்துழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்து அரசுப் பேருந்து. அப்போது, அத்தியூத்து பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாஹுல் ஹமீது என்ற பயணி, தன் அருகில் இருந்த பயணியிடம் தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த சக பயணி ஆம்புலன்ஸ்க்கு அழைத்தார். 20 கி.மீ. தொலைவில் இருக்கும் தென்காசியில் இருந்து ஆம்புலன் வர வேண்டும். நிலைமையைப் புரிந்துகொண்ட அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பேருந்தை இயக்கியுள்ளனர்.
ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்ட ஹமீதுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஹமீதை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர், அரசுப் பேருந்து ஓட்டுநர் அவரது குடும்பத்தினருக்கும் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் ஆறுமுகசாமி கூறியதாவது:
ஹமீதுக்கு நெஞ்சுவலி எனத் தெரிந்தவுடன் அவரது கையில் இருந்த பையை எடுத்துப் பார்த்தோம். அதில் இருந்த கோப்புகளின் மூலம் அவர் இதயநோயாளி என்பது தெரியவந்தது. 20 கி.மீ. தொலைவில் இருக்கும் தென்காசியில் இருந்து ஆம்புலன் வர வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனை நகருக்குள்ளே அருகில் இருந்ததால் அங்கே விரைந்து செல்வதுதான் ஒரே வழி எனத் தோன்றியது. இதனால், சுமார் 50 நிமிட பயண நேரம் கூடுதலானது. ஆனால், பேருந்தில் இருந்த சக பயணிகள் யாருமே எதிர்ப்புத் தெரிவிக்காமல், ஒத்துழைப்பு அளித்ததால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.








