ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரத்தில் உலக நோய்த் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து வயதினரையும் நோய்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் வகையில், தடுப்பூசிகளின் பயன்பாடு, அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாரமாக உலக நோய்த் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் சார்பில், அனைவருக்கும் நீண்ட ஆயுள் என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான நோய்த் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. தடுப்பூசி மூலம் தடுக்கப்படும் நோய்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் சமூகத்தைப் பாதுகாப்பதே இதன் முக்கியக் குறிக்கோளாகும்.
சரியான நேரத்தில் கொடுக்கப்படும் தடுப்பூசியானது பல்வேறு நோய்களில் இருந்தும், தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலின்போது, தடுப்பூசி செலுத்துவதன் தேவை பலமடங்கு அதிகரித்தது. இளம்பிள்ளை வாதம், டெட்டனஸ், கல்லீரல் அழற்சி போன்ற பல்வேறு நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் தடுப்பூசியை செலுத்துவதில் பெற்றோர்களுக்கு பெரும் மன அழுத்தம் உள்ளது.
இந்தியாவில் 65 சதவீத குழந்தைகள் மட்டுமே தங்களது முதல் ஆண்டில் முழுமையான தடுப்பூசியைப் பெறுகின்றனர். நோய் பாதிப்பிலிருந்து காப்பற்ற பயன்படும் தடுப்பூசிகளின் பயன்பாடு மற்றும் அதன் ஆற்றல் குறித்த தெளிவான சான்றுகள் உள்ளன. ஆனாலும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் தடுப்பூசி செலுத்தாமல் தவறவிடுவதன் மூலம், குழந்தைகள் மற்றும் அவர்களைச் சார்ந்த சமூகம் பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர் என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது.
குழந்தைப் பருவத்தில் செலுத்த வேண்டிய தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து குழந்தை நல மருத்துவர்கள், நிபுணர்கள் கூறியதாவது:
தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வரலாறு நமக்கு கற்பித்துள்ளது. பெரியம்மை, போலியோ போன்ற பல்வேறு ஆபத்தான நோய்களை ஒழிக்க தடுப்பூசியே உதவுகிறது. பல்வேறு அபாயகரமான நோய்களைத் தடுக்கும் ஒரே முறை குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் தடுப்பூசி மட்டும்தான்.
குழந்தைப் பருவத்தில் போடப்படும் தடுப்பூசிகளானது அந்தக் குழந்தை பிற்காலத்தில் நோய்களை எதிர்த்துப் போராட மிகவும் உதவுகின்றன. தற்போதைய கொரோனா தொற்று பரவல் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதன் மூலம் அவர்கள் நோய்களை எதிர்த்துப் போராட முடியும் என்றனர்.
குழந்தைப் பருவத்தில் செலுத்த வேண்டிய முக்கியமான தடுப்பூசிகள்:
- காசநோய்க்கான BCG (BACILE CALMETTE-GUERIN) தடுப்பூசி, வாய்வழி போலியோ தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி.
- தடுப்பூசி தடுக்கக் கூடிய நோய்களில் டெட்டனஸ், ரோட்டா வைரஸ், பெர்டுசிஸ், நிமோகோகல் ஆகியவை அடங்கும்.
- ரூபெல்லா, டைபாய்டு தடுப்பூசி
- ஜப்பானிய மூளைக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் தடுப்பூசி
- இன்ஃப்ளூயன்ஸா, மெனிங்கோகோகல், ரேபிஸ் போன்ற பிரச்னைக்ளுக்கு சிறப்பு தடுப்பூசிகள் உள்ளன.









