சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, நடிகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று நடிகை ஓவியா பேசியுள்ளார். பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் நடக்கும் பாலியல் சீண்டலைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார்.
சேலத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நடிகை ஓவியா கலந்துகொண்டு மாணவிகள் மத்தியில் உற்சாக நடனமாடினார். தனது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசுகையில், நான் கேரளாவாக இருந்தாலும் தமிழ்நாடு ரொம்பப் பிடிக்கும். சென்னை தான் எனக்கு பிடித்த இடம். பிரியாணி ரொம்ப பிடிக்கும். உலகில் பணம் தான் முக்கியம். பணத்துக்காக தான் நடிக்க வந்தேன். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் ஆனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழ் திரைப்படத் துறையில்
நடிகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். பெண்கள் உரிமைகளைப் பற்றி பேசும் நாட்டில் சம்பளத்திலும் சம ஊதியம் தர வேண்டும்.
பெண்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராகவும் நடக்கும் பாலியல் சீண்டலைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாடங்களில் பாலியல் கல்வி கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கலாச்சாரம் என்ற பெயரில் மூடி மறைக்க வேண்டாம். பாலியல் தொடர்பான புரிதலலை வீடுகளிலிருந்து துவங்க வேண்டும்.








