உயர் நீதிமன்றங்களில் பெண் தலைமை நீதிபதிகளே இல்லை; வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

நாட்டில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்ஹா உயர்நீதிமன்றத்தில் பணிபுரியம் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் என்பது குறித்து கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்து மூலமாக பதில் அளித்தார். அதில், உச்சநீதிமன்றத்தில் இதுவரை 11 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் தற்போதுள்ள 775  நீதிபதிகளில் 106 பேர் பெண்கள்.

1950ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து 2013ம் ஆண்டு வரை 4 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கடந்த 9 ஆண்டுகளில் 15 பெண்களுக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் நீதிபதிகள் (13) நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். மணிப்பூர், மேகாலயா, பாட்னா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லை.

கவுஹாத்தி, ஹிமாச்சல், ஜம்மு & காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் சிக்கிம் உயர் நீதிமன்றங்களில் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே இதுவரை நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதையை சூழலில், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் ஒன்றில் கூட பெண் தலைமை நீதிபதிகள் இல்லை என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.