நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. அதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பின்னர், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் 21ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் மைனஸ் 7.7 சதவிகிதமாக இருக்கும் எனவும், 22ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி 11.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இரு அவைகளும் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் அலுவல்கள் குறித்து விவாதிப்பதுடன், தொடரை சுமுகமாக நடத்துவது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இருந்தாலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.