பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்றுத் தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று இரு அவைகளிலும் பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகளின் தரப்பில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களயில் எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எம்பிக்கள் பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அதற்கு அனுமதிக்கவில்லை. இதன்காரணமாக பெட்ரோல் விலை உயர்வை குறித்து விவாதிக்ககோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால், 12 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் இரு அவைகளும் 12 மணிக்கு கூடியபோதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை கைவிடவில்லை. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை வலியுறுத்தி மக்களவை, மாநிலங்களவையில் தனித்தனியே அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மக்களவையில் உரையாற்றிய மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், அண்மையில் புதுச்சேரி, கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார்.அப்போது மீன்வளத்துறைக்கு அமைச்சர் இல்லை என்று அவர் தெரிவித்த தாகவும் குறிப்பிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் மீன் வளத்துறைக்கு என அமைச்சகம் அமைக்கப்பட்டது ராகுல் காந்திக்கு நினைவில் இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.







