கர்நாடக மாநிலத்தில் முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க கோரி அவரது ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க நேற்று முந்தினம் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் முதலமைச்சர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்ய முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனித்தனியாக எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் முடிவுகளை காங்கிரஸ் தலைமை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து தேர்வு செய்ய டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்ட நிலையில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : “விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்..!” – டிஜிபி விளக்கம்
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான பரமேஸ்வராவை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். துமகூருவில் அவரது ஆதவராளர்கள் பதாகைகள் ஏந்தி திடீர் போராட்டத்தில் இறங்கியதால் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







